×

கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 138வது மே தின வாழ்த்து..!!

சென்னை: கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் 138வது மே தின வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது 138வது மே தின புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அனைத்து வகையான சமூக ஒடுக்குமுறைகளுக்கும் – சுரண்டல்களுக்கும் முடிவு கட்டி சமத்துவ சமூகத்தை உருவாக்குவோம். சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, பாலின சமத்துவம் உள்ளிட்டு தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்க பரந்துபட்ட தொழிலாளி – விவசாயி ஒற்றுமையை கட்டி வலுமிக்க போராட்டங்களை முன்னெடுக்க இந்த மே தினத்தில் உறுதியேற்போம்.

உலகெங்கும் தொழிலாளி வர்க்கத்தினுடைய உரிமைகளுக்காக 19ம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டம் உக்கிரம் அடைந்தது. அமெரிக்காவில் சிகாகோ நகர தெருக்களில் இறங்கி தொழிலாளி வர்க்கம் வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தியது. எட்டு மணி நேர வேலை, பணிப் பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கான உரிமைகள் ஆகியவற்றை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டத்தை முடக்க அரசாங்கத்தினால் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அந்த தியாகத்தை நினைவு கூரும் வகையில் இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலம் 1889ல் உலகத் தொழிலாளர் இயக்கம் ஆண்டு தோறும் தொழிலாளர்கள் உரிமைகளுக்கான தினமாக – மே முதல் நாளை – மே தினமாக – கொண்டாட வேண்டுமென்று அறைகூவல் விடுத்தது.

அதன்படி உலகம் முழுவதும் மதம், இனம், மொழி வேறுபாடின்றி தொழிலாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தியாவில் முதன் முதலில் மே தினத்தை கொண்டாடிய பெருமை தமிழகத்தைச் சார்ந்த தோழர் சிங்காரவேலர் அவர்களையேச் சேரும். கடந்த 10 ஆண்டு காலத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு முற்றிலும் தொழிலாளர் விரோத – விவசாயிகள் விரோத – விவசாய தொழிலாளர்கள் விரோத – ஒட்டுமொத்தத்தில் மக்கள் விரோத அரசாக செயல்பட்டது. தொழிலாளர் நலச் சட்டங்களை எல்லாம் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியது. பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன்களை காப்பதற்காக தொழிலாளர்களின் நலன்கள் அனைத்தையும் காவு கொடுத்தது.

கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து அவர்களது உழைப்பை உறிஞ்சி அந்த செல்வங்களை எல்லாம் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மெகா பணக்காரர்களுக்கும் மடை மாற்றியது. நாட்டின் மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவீதம் அளவிற்கு உள்ள பெரும் பணக்காரர்கள், பெரும் முதலாளிகளின் கைகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்தை கொண்டு போய் சேர்த்தது மோடி அரசு. அதை வேளையில் மக்கள் தொகையில் கீழ் மட்டத்தில் உள்ள 50 சதவீதமாக இருக்கக்கூடிய ஏழை எளிய தொழிலாளர்கள், நடுத்தர வர்க்க மக்களின் கைகளில் வெறும் 13 சதவீத வருமானத்தை மட்டுமே விட்டு வைத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகள் பரம ஏழைகளாகவும் வறியவர்களாகவும் ஆக்கப்பட்டார்கள்; இத்தகைய ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்திட நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டுள்ளன. நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மதச்சார்பற்ற அரசினை ஏற்படுத்திட நாடு முழுவதும் மக்கள் வீறுகொண்டு எழுந்துள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும். அதேசமயம், மோடி அரசின் தாராளமய, கார்ப்பரேட் மயக் கொள்கைகளை எதிர்த்தும், பறிக்கப்பட்ட உரிமைகளையும், உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரங்களையும் மீட்டெடுப்பதற்கான வீரஞ்செறிந்த போராட்டங்களை முன்னெடுக்க இந்த மே தின நன்னாளில் உறுதியேற்போம்.

இன்றைய சூழலில் உலக முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. தங்களது லாப வேட்டையை அதிகரிக்க உழைப்பாளி மக்கள் மற்றும் மூன்றாம் உலக நாடுகள் மீது கொடும் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்கா இஸ்ரேலை ஏவிவிட்டு பாலஸ்தீனத்தின் மீது கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 50,000 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். அதே போல உக்ரேனை கைப்பாவையாக பயன்படுத்தி ஒரு நீண்ட போரினை அமெரிக்க ஏகாதிபத்தியம் தூண்டிவிட்டு குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள செல்வங்களை, இயற்கை வளங்களை கொள்ளையடித்து உலகப் பெரும் பணக்காரர்கள் கைகளில் கொண்டு சேர்ப்பதற்காக உலக முதலாளித்துவம் சென்று கொண்டிருக்கிறது.

அதே வேளையில், முதலாளித்துவத்திற்கு எதிராக உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கம் பிரம்மாண்டமான போராட்டங்களை நடத்தி வருகிறது. லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டு பல நாடுகளில் தொழிலாளி வர்க்கம் எழுச்சி பெற்று வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்தியாவிலும் அத்தகைய போராட்டங்களை முன்னெடுத்து பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை உறுதி செய்வதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றென்றும் முன் நிற்கும். சமூக மாற்றத்தையும், சமதர்ம சமூகத்தையும் உலகெங்கும் கொண்டு வருவதில் தொழிலாளி வர்க்கத்தின் வீரஞ்செறிந்த வர்க்க கடமையை உணர்ந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின தியாக வரலாறுகளின் வழித்தடத்தில் தொடர்ந்து சமரசமற்ற போராட்டங்களை முன்னெடுக்க மே தினத்தில் உறுதியேற்கிறது.

The post கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 138வது மே தின வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : 138th May Day ,Marxist Communist Party ,CHENNAI ,Dinakaran ,
× RELATED நாகை நாடாளுமன்ற தொகுதியில் 4 முறை...